ரயில்வே துறையின் இணையதளத்தில் டிக்கெட்டுக்கள் ரிசர்வேஷன் செய்ய வேண்டும் என்றால் அனைவரும் கூறும் குற்றச்சாட்டு, இணையதளம் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். சின்ன சின்ன நிறுவனங்களின் இணையதளங்கள் கூட படுவேகமாக இயங்கும் இந்த நவீன இண்டர்நெட் காலத்தில் பல கோடிகள் வருமானம் பெறும் ரயில்வே துறையின் இணையதளம் மிக மெதுவாக இயங்குவது பயணிகளை அதிருப்தி அடைய செய்தது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ரயில்வேத்துறையின் இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் சர்வரின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இனிமேல் பயணிகள் விரைவாக சேவையை பெற முடியும் என்று கூறப்படுகிறது.
இந்திய ரயில்வேத்துறை 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் 21 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், பயணிகளுக்காக மட்டும் 12 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பயணம் செய்து வருகிறார்கள்.
பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய திட்டங்களை ரயில்வேத்துறை அறிமுகம் செய்து வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ரயில்வேத்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் (www.indianrail.gov.in) புதுப்பிக்கப்பட்டுள்ளது. முகப்பு பக்கம் மாற்றப்பட்டதோடு இணையதளத்தின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் புறப்பாடு, வருகை நேரம், எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறுவது, நடப்பில் காலியாக உள்ள இடங்களைத் தெரிந்து கொள்ளுதல் ஆகிய சேவைகளை விரைவாக பெற முடியும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ இந்திய ரயில்வே இணையதளத்தில் சர்வரின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் புறப்பாடு, நடப்பில் காலியாகவுள்ள இடங்கள், எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறுவது, ரயில் வந்தடையும் நேரம், கட்டண விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவாக பெற முடியும். தற்போதைய நிலவரப்படி, பயணிகளின் பிஎன்ஆர் எண் மூலம் ரயில்பெட்டி எண் மற்றும் பெர்த் அல்லது இருக்கை நிலவரங்களை மட்டுமே பார்க்க முடியும். இனி பிஎன்ஆர் எண் மூலம் அன்றைய தினம் ரயில் புறப்படும் நேரத்தை துல்லியமாக பார்க்கும் வசதியை கொண்டுவர உள்ளோம். இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.
English Summary: Railways website gets updated after 15 Years. E-Service will be fast here after.