சென்னை: சென்னை உட்பட, 8 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டு வந்த நிலையில் இரவு முதல் அங்காங்கே விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் காணப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பரவலாக மிதமான மழை தொடரும். கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் (டிச. 4,5,6) மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன்படி, சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகடலேராப்பகுதி, பொன்னேரி, எண்ணூர், திருவெற்றியூர், பெரியபாளையம், கும்மிடிபூண்டி, ஆகிய பகுதிகள் மிதமான மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரபகுதிகள், மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருவாரூர் மவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று காரைக்கால் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.