இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க உள்ளதை அடுத்து சென்னை நகரம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. சென்னை நகரில் உள்ள மண்டலம், பகுதி உதவி பொறியாளர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி குடிநீர் வாரிய அதிகாரிகள் மக்களிடையே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் தற்போது சென்னை நகர் முழுவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒரு பகுதியாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் முயற்சியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை குடிநீர் வாரியத்தின் அடையார் மண்டலம் சார்பில், தரமணி அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் கையில், ‘‘மழைநீரை சேகரிப்போம்! தண்ணீர் பிரச்சினையை தீர்ப்போம்’’ என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் எடுத்துக்கொண்டு முக்கிய சாலைகளில் நேற்று பேரணியாக சென்றனர். இதில், பகுதி பொறியாளர் எஸ்.தயாளன், உதவிப்பொறியாளர் ஏ.சந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள், குடிநீர் வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.English summary-Chennai corporation to conduct rain water harvesting programs across city.