guindy-zoo-20102015சென்னையின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சுற்றுலா தலங்களுக்கும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாக உள்ளது. ஆனால் இன்று மாலை முதல் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை தொடங்கவுள்ளதால், இன்று மாலை அதிகளவு மேற்கண்ட இரண்டு சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியன இன்று வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகளுக்காகப் பூங்கா விடுமுறை தினமாகும். எனினும், தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 20-இல் பூங்காக்களுக்கு விடுமுறை இல்லை. எனவே, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியன இன்று வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு ராஜநாகங்கள் புதியதாக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த அரிய வகை பாம்புகளை சுற்றுலா பயணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் பரிமாற்ற முறையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிலிக்குலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு ஆண் ராஜநாகங்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இவற்றுக்கு மாற்றாக, வண்டலூரில் இருந்து இரண்டு ஆண் நெருப்புக் கோழிகள் பிலிக்குலா பூங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ராஜநாகங்கள் பசுமை மாறாக் காடுகளில் காட்டாறுகள், நீர் நிலைகளின் அருகே குளிர்ச்சியாக உள்ள இடங்களில் வாழும் பழக்கம் கொண்டவை என்பதால் வண்டலூரில் வெளிப்புறச் சூழலில் வைக்கப்பட்டுள்ளன. இயற்கையான வாழ்விடத்தையொத்த சுற்றுச்சூழல் வளமைப்படுத்தும் பணிகளும், குறைவான வெப்பநிலையைப் பராமரிக்கும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளன.
English summary-Vandalur Zoo and Children’s park in guindy will be kept open today