special-bus-20102015
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் மொஹரம் ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் நாளை முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை தினமாக அமைந்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த தேதிகளில் ஏற்கனவே ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டதால் தற்போது பொதுமக்கள் இன்று மாலை முதல் பேருந்துகளில் செல்லவுள்ளனர். இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மாலை முதல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதால போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள போக்குவரத்து துறை, தற்போது இந்த தொடர் விடுமுறையிலும் பயணிகளின் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இகுறித்து போக்குவரத்து துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்குகிறோம். அந்த வகையில் ஆயுதபூஜை விடுமுறைக்காக 19-ந் தேதி நள்ளிரவு முதல் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறோம். நேற்று காலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை, தென்மாவட்டங்களுக்கு விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை வழியாகச் செல்லும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கினோம்.

தொடர் விடுமுறையை மனதில் வைத்து பெரும்பாலான பயணிகள் இன்றும் பயணம் மேற்கொள்ள இருப்பதால் 500-க்கும் மேலாக சிறப்பு பஸ்களை தென்மாவட்டங்களுக்கு இயக்க தீர்மானித்திருக்கிறோம். மேலும் ஆயுதபூஜை தினத்தன்று இன்னும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படும். எனவே பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல எந்த இடையூறும் ஏற்படாது என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் ஆயுதபூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து ஞாயிறு அன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. மொஹரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொஹரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தான் தெரிந்தது. இதனால், 10-ம் நாளான அக்டோபர் 24-ம் தேதியை மொஹரம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை காஜி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை பரிசீலனை செய்த தமிழக அரசு, அக்டோபர் 23-ம்தேதிக்குப் பதிலாக 24-ம் தேதியை மொஹரம் பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
English summary-special buses from chennai to south districts on account of ayutha puja