rajarajacholan

ராஜராஜ சோழனின் மகனும், சோழர்களின் பொற்கால ஆட்சியை கொடுத்தவருமான ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் நிறைவு ஆனதை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ஆயிரம் ரூபாய் நோட்டு மற்றும் பத்து ரூபாய் நாணயங்களை வெளியிட மத்திய அரசு வெளியிடவுள்ளது.

ஏற்கனவே ராஜேந்திர சோழனின் உருவம் பதித்த தபால் தலை கடந்த மார்ச் 20ஆம் தேதி வெளியானதை தொடர்ந்து அவரது உருவம் பதித்த நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு தற்போது வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல ராஜராஜ சோழன் பதவியேற்று ஆயிரம் ஆண்டுகள் பூர்த்தி யானதை ஒட்டி, ராஜராஜ சோழனின் உருவம் பொறித்த அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாணயங்கள் வெளியிடும் போது அரசு சார்பில் விழா எடுப்பது வழக்கமில்லை என்பதால் இந்த விழாவை கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன் அவர்கள் தலைமையில் விழா நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த விழா வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி ஆதிரை தினத்தன்று நடைபெறும் என்றும், அந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டு ராஜேந்திர சோழன் உருவம் பதித்த நாணயங்களை வெளியிடுவார் என்றும் கோமகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த விழா நடைபெறும் இடம் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நாணயங்களை வெளியிடுவதோடு மட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள மத்திய கப்பற்படை தளத்தில் ராஜேந்திர சோழனின் படத்தை திறப்பதற்கும் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கப்பற்படை விமானதளத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும், அந்த கோரிக்கை விரைவில் ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கோமகன் மேலும் கூறினார்.

English Summary: Rajendra studded figure of rupees, currency Issue.