லைஃப் இன்சூரன்ஸ் என்று சொல்லக்கூடிய எல்.ஐ.சி பாலிசியை ஒருசிலர் ஆர்வத்தில் போட்டுவிட்டு அதன்பின்னர் பாலிசி தொகையை தொடர்ந்து கட்டாமல் விட்டுவிடுவார்கள். இவ்வகை பாலிசிகள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் காலாவதியாகி, என்ன காரணத்திற்காக பாலிசி போட்டார்களோ அந்த பலன் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இந்நிலையில் பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் இறுதி வரை நடைபெறும் என, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் அறிவித்துள்ளார்.
சென்னையில் எல்.ஐ.சி.யின் 59-ஆவது ஆண்டு விழா சமீபத்தில் தொடங்கியது. அண்ணாசாலை எல்.ஐ.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த காப்பீட்டு வார விழா நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன், வாடிக்கையாளர்கள் சிறப்புச் சேவை மையத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர், காப்பீட்டு வார விழா குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், காப்பீட்டுத் துறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. இருப்பினும், எல்.ஐ.சி. பிரீமியம் வருமானத்தில் 69.21 சதவீதமும், தனி நபர் காப்பீட்டில் 77.85 சதவீதமும் சந்தைப் பங்களிப்பைக் கொண்டு முன்னிலை வகித்து வருகிறது. புதிய திட்டங்கள் அறிமுகம்: நிகழாண்டில் “ஜீவன் தருண்’, பங்குச் சந்தையுடன் இணைந்த புதிய “எண்டோமெண்ட் ப்ளஸ்’ ஆகிய இரண்டு புதியத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் காப்பீட்டு வார விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளோம். நிகழாண்டு மார்ச் இறுதிக்குள், எல்.ஐ.சி, புதிதாக மேலும் 5 காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது.
காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு, பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வசதியாகச் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு முகாம், செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் இறுதி வரை நடைபெறும். முகாமில் வாடிக்கையாளர்கள் பிரீமியம் தொகை செலுத்தாத பாலிசிகளை தாமதத் தொகை செலுத்தி, புதுப்பித்துக் கொள்ளலாம். பாலிசிகளை புதுப்பிப்பதற்கு அருகிலுள்ள எல்.ஐ.சி. அலுவலகங்கள், வாடிக்கையாளர் மையம் ஆகியவற்றை பாலிசிதாரர்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், காலதாமதத் தொகையில், 20, 25, 30 சதவீதம் வரை தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்றார் த.சித்தார்த்தன்.
English Summary:Rare opportunity to update,expired LIC policies. South Regional Manager Information.