சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், தமிழகத்தின் தென் மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே, தமிழகத்துக்கு அக்டோபர் 7ம் தேதி ரெட் அலர்ட் அளிக்கப்பட்டது.
ஆனால், அதி கன மழைக்கான வாய்ப்பு தற்போது இல்லாததால் தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட அதி கன மழை பெய்ய வாய்ப்பில்லாததால் ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அதே சமயம், கன மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அக்டோபர் 8ம் தேதி வரை அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி வலுவிழந்ததன் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதி கன மழைக்கான வாய்ப்பு நீங்கியதால் ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.