தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2019 – 20-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு, பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வித் துறைக்கும் தேர்வு ரத்துக்கான அரசின் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப் பதிவேடு மூலம் 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கல்வித் துறை சார்பில் அதற்கான வழிகாட்டுதல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வரவில்லை. ஆனால், இந்த மதிப்பெண் வழங்கும் முறைக்காக, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் வருகைப் பதிவேடு பட்டியலை உடனடியாக பெற வேண்டுமென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.