பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சுமார் 1,000 பேர் சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்எஸ்ஏ) அரசு பள்ளிகளில் கடந்த 2012-ம் ஆண்டு 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, கணினி) நியமிக்கப்பட்டு தற்போது 12,600 பேர் பணியாற்றி வருகிறார்கள். தினசரி அரைநாள் வீதம் வாரத்தில் 3 நாட்கள் பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ.7,700 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
6 ஆண்டு காலமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், பணிநிரந்தரம் செய்யக்கோரி 1,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நேற்று காலை 10 மணியளவில் சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் தரையில் அமர்ந்தவாறு கோஷமிட்டனர்.
இதனால் டிபிஐ வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.