கடந்த ஜூன் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று கூட தமிழகத்தில் இருந்து செல்லும் சுமார் 59 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இதுவரை சுமார் 3200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்திய ரயில்வேக்கு சுமார் ரூ.1,230 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், வரும் 23ஆம் தேதிக்குள் அங்கு சீரமைப்பு பணிகளை முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “‘‘இட்டார்சி ரயில்நிலைய தீ விபத்து இதுவரை நடந்த விபத்துகளிலேயே மிகப்பெரிய விபத்தாகும். இந்த வழித்தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது தினமும் 70க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 17ஆம் தேதியில் இருந்து இதுவரையில் 3200-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரயில்வே துறைக்கு சுமார் ரூ.1,230 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தற்போது 950 பொறியாளர்களைக் கொண்டு 50 அதிகாரிகளின் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 17ஆம் தேதிக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தோம். வரும் 23-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’

இவ்வாறு ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

English Summary : Railway department had a loss of Rs.1,230 crore loss due to Itarsi incident.