நடுத்தர வயது பெண்களை தாக்கக்கூடிய நோய்களில் ஒன்றாகிய மார்பக புற்றுநோய் குறித்து தமிழக அரசு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை மிகக்குறைந்த செலவில் அதாவது வெறும் ஐந்து ரூபாயில் மேற்கொள்வதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக சென்னை ஐஐடி நிறுவனத்தின் பேராசிரியர் காமகோடி வீழிநாதன் அவர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி பேட்டர்சன் புற்று நோய் மையத்தில் நேற்று புற்று நோயில் இருந்து மீண்டவர்களுக்கான தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காமகோடி வீழிநாதன் பேசியதாவது: கல்வி, மருத்துவம் இந்த இரண்டும் வியாபாரமாகி வருவதால்தான் நாட்டில் ஊழல் பெருகிவிட்டது. இன்றைய தினத்தில் மார்பகப் புற்று நோயைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனை செய்வதற்கு ரூ. 4 ஆயிரம் வரை செலவாகிறது. இதைக் குறைத்து வெறும் ரூ. 5 செலவில் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிய கருவி தயாரிக்கும் பணியில் ஐஐடி நிறுவனம், பேட்டர்சன் புற்று நோய் மையம் ஆகியவை இணைந்து பணியாற்றி வருகின்றன. வெப்ப ஆற்றலின் மூலம் மார்பகப் புற்று நோயைக் கண்டறியும் கருவி தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த கருவி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும்
மேலும், கிராமங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சிறிய அளவிலான கருவியை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இந்தப் பரிசோதனை முடிவுகளைக் கணினி மூலம் மருத்துவர்களுக்கு அனுப்பும் வகையிலும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கருவியின் மூலம் இன்னும் பத்து ஆண்டுகளில் சுமார் 50 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு காமகோடி வீழிநாதன் பேசினார்.
இதே நிகழ்ச்சியில் பேட்டர்சன் புற்று நோய் மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விஜயராகவன் பேசியபோது, “மனிதனின் உடலில் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். அதே போல, தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்தாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் புற்று நோயில் இருந்து மீண்ட சுமார் 50 பேர் பங்கேற்றனர்.
English Summary:Rs.4000 not Required.Breast Cancer Testing in Rs.5.Chennai IIT Professor Information