தமிழகம் முழுவதும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் ஆகியோர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு ஒன்று நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு பிளீடர் வேணுகோபால் ஆஜராகி, அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார். அதில் கடந்த மூன்று மாதத்தில் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட ஏழு நகரங்கள் மற்றும் 31 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் கடந்த ஜூலை மாதம் இரண்டு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 21 ஆயிரத்து 184 வழக்குகள் பதிவு செய்யபட்டதாகவும், ஜூலை மாதத்தில் 2 ஆயிரத்து 312 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் ஹெல்மெட் அணியாமல் சென்று இறந்தவர் எண்ணிக்கை 444 பேர். ஹெல்மெட் அணிந்து சென்று விபத்து நடந்து 54 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு எதிராக 2 லட்சத்து 21 ஆயிரத்து 747 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2 ஆயிரத்து 712 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இது ஜூலை மாதத்தில் நடைபெற்றதை விட 400 விபத்துக்கள் அதிகம். ஹெல்மெட் அணிந்து சென்று விபத்தில் 69 பேர் ஆகஸ்ட் மாதம் உயிரிழந்துள்ளனர். இது ஜூலை மாதத்தை விட 15 பேர் அதிகம். செப்டம்பர் 15ம் தேதி வரை 1576 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெல்ெமட் அணியாமல் சென்றவர்கள் 255 பேர், ஹெல்மெட் அணிந்து சென்ற 34 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

அப்போது நீதிபதி “ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கவில்லை. அதனை அமல்படுத்தினால் விபத்துக்கள் குறைந்து இருக்கும். ஆனால் அரசின் அறிக்கையை பார்த்தால் விபத்துக்கள் உயர்ந்து வருவது தெளிவாகின்றது. சாலை விபத்தில் காயம் அடையும் நபர்களை வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும் இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் கட்டாயம் ஹெல்மெட் இலவசமாக இரண்டு அளிக்க வேண்டும். இதனை மத்திய அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். ஹெல்மெட் திருடு போவதை தடுக்க இரண்டு சக்கர வாகனங்களில் இரண்டு ஹெல்மெட் வைக்கும் வகையில் வசதிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நட்சத்திரம் மற்றும் அரசியல் பிரபலங்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஹெல்மெட் கட்டாயம் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினார்.

English Summary: Helmets to be provided free by Two Wheeler Companies to their customers while buying the bike, Chennai High Court.