வரும் ஆவணி மாத பூஜைக்கு வேண்டி இன்று திறக்கப்பட்டுள்ள ஐயப்பன் கோயில் நடை, வரும் 21-ம் தேதி மாலை மீண்டும் மூடப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் மண்டலப் பூஜைக்கு வேண்டி ஐயப்பன் கோயில் நடை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் திறக்கப்படும். மலையாள நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் முதல் 5 நாட்களுக்கு கோயில் திறக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி கேரளாவின் முக்கிய பண்டிகைகளின் போது ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. கடந்த வாரம் நிறை புத்தரசி என்கிற முக்கிய நிகழ்வுக்காகக் கூட சபரிமலை கோயில் திறக்கப்பட்டது. அன்றைய நாளில் வளமும் செழிப்பும் வேண்டி நெற்கதிர்கள் கோயிலுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
வரும் 18-ம் தேதி ஆவணி மாதம் பிறக்கிறது. அதற்காக நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோயிலை திறக்கவுள்ளார். அன்றைய நாளில் கோயிலை சுத்தம் செய்து, விளக்கு மட்டும் ஏற்றப்படும். அதை தவிர்த்து வேறு எந்த விதமான வழிபாடும் நடத்தப்படமாட்டாது.
வரும் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நாள்தோறும் நெய் அபிஷேகம், கணபதி ஜோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். மேலும் படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க ஆன்லைன் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.