புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதனால் விழா நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.
தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த மாதம் பம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நிறைபுத்தரிசி பூஜை மற்றும் ஆவணி மாத பூஜைகள் விமரிசையாக நடைபெறவில்லை. சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்லமுடியாத சூழ்நிலையில் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடத்தப்பட்டது.
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வருகிற 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து தீபாராதனை நடத்துவார்.
17-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல பூஜைகள் நடைபெறும். 21-ந் தேதி வரை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
புரட்டாசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்பட உள்ளது.
பம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பம்பையில் நிலை குலைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் சன்னிதானம் செல்ல தற்காலிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, பல ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளதால், பக்தர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடி நீர் ஆகியவற்றை கொண்டு வருவது நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.