வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கவனத்திற்கு.. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 8 பாதுகாப்பு முறைகள்..
1. வெள்ள நீர் வடிந்தபின் உங்கள் வீடுகளுக்குள் நுழையும்போது தவறாமல் காலணி அணிந்து செல்லுங்கள். தரையில் உடைந்த கண்ணாடித் துண்டுகள், கூர்மையான பொருட்கள் உங்கள் பாதங்களை காயப்படுத்தலாம். வீட்டில் மின்சாரம் வந்துவிட்டதா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்..
2. வெள்ள நீரில் பாம்புகள், தேள்கள் போன்ற விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் உள்ள மேசை, ஸோபா, நாற்காலி போன்ற பெரிய பொருட்களின் அடியில் தஞ்சம் புகுந்திருக்கலாம். வீட்டைச் சுத்தம் செய்ய அவற்றை நகர்த்தும்போது, கவனமாக இருங்கள்..
3. நல்ல தண்ணீரைக் கொண்டு வீட்டின் சுவர் முதற்கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். பின்னர் லைசால், பீனைல் டெட்டால் போன்ற கிருமிநாசினிகளை தெளித்து விடுங்கள்.
4. வீட்டிலிலுள்ள பாத்திரங்களை உபயோகப்படுத்தும் முன் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகக் கழுவிய பின்னர் உபயோகப்படுத்துங்கள்.
5. தண்ணீரில் நனைந்த துணிமணிகளை முதலில் வெறும்தண்ணீரில் சிறிது நேரம் நனைத்து வைத்து பின்னர் டெட்டால் பீனைல் கலந்த நீரில்…நனைத்து ஊற வைத்துப் பிழிந்து உலரவைத்து உபயோகியுங்கள். மழை நீரில் மிகவும் நனைந்து ஊறிய துணிகளை உபயோகப்படுத்தாமல் அவற்றை டிஸ்போஸ் செய்து விடுதல் நல்லது.
6. நிலத்தடி நீர் சேமிப்புத் தொட்டிகளையும் ஓவர் ஹெட் டேங்க் -கையும் நன்கு சுத்தம் செய்தல் அவசியம். அவற்றில் உள்ள நீரை முதலில் வெளியேற்றி, தொட்டியை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து கழுவிவிடவேண்டும். பின்னர் மோட்டார் போட்டு நீரை ஏற்றியபின்னர், ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கும் 4 கிராம் பிளீச்சிங் பவுடர் அல்லது 20 மிலி திரவ குளோரினை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து 15 நிமிடங்கள் கழித்து, அந்தத் தண்ணீரை நமது தண்ணீர்த் தொட்டியில் கலக்க வேண்டும். போர்வெல்லில் புனலைக் கொண்டு இந்த மருந்து நீரைக் கலக்கலாம்.மருந்து கலந்து ஒருமணி நேரம் கழித்து, நீரை உபயோகிக்கலாம். குழாய்களைத் திறந்ததும் வரும் நீரை பத்து நிமிடங்களுக்கு வெளியே செல்லவிடுங்கள். அதன் பின்னர் வரும் நீரை உபயோகியுங்கள்.
7. குடிநீரை நன்கு காய்ச்சி ஆற வைத்து பின்னர் குடிக்க உபயோகியுங்கள். சிறிது நாட்களுக்கு போர்வெல், நீர் சரியாகும் வரை குடிக்காமல் இருப்பது நல்லது.
8. உங்களுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நிறைய நீர் ஆகாரம் பழச்சாறு, உப்பு சேர்த்த அரிசிக்கஞ்சி இளநீர் இதுபோலக் குடியுங்கள்., மருத்துவ உதவிக்கு 104ஐ அழைக்கலாம்.,
செய்தி ஆதாரம்.. பொதுசுகாரத்துறை, தமிழ்நாடு அரசு.
English summary-Tamilnadu government releases safety measures for people in flood affected areas in Chennai