கடந்த 2002ஆம் ஆண்டு மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சல்மான்கான் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இன்று 5 வருட சிறை தண்டனை என மும்பை அமர்வு நீதிமன்றம்அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதால் ஏற்பட்ட விபத்தில் நுருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக கைது செய்யப்பட்ட சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் சல்மான்கான் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக சாட்சியம் கூறினர். ஆனால் சல்மான்கான் தரப்பில் அவர் காரை ஓட்டவிலை என்றும் தனது டிரைவர் அசோக் சிங் தான் கார் ஓட்டினார் எனவும் கூறப்பட்டது. கார் டிரைவர் அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி அதனை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் மது அருந்திவிட்டு சல்மான் கான் காரை ஓட்டியது நிரூபணமாகியுள்ளதாகவும், லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டியது உள்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகியுள்ளதால் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு நீதிபதி தேஷ் பாண்டே இன்று பிறபகல் தீர்ப்பு வழங்கினார் அப்போது சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து சல்மான் கான் மும்பை ஆர்தர் சிறைசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.