இந்திய தலைநகர் புதுடில்லியில் இருந்து அமெரிக்காவின் முக்கிய நகரமான சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு முதல்முறையாக நேரடி விமானம் ஒன்று வரும் டிசம்பர் 2 முதல் இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானம் புதுடில்லியில் இருந்து 16 மணி நேரம் 45 நிமிடங்களில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை சென்றடையும். சென்னை பயணிகளும் இந்த விமானத்தில் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநர் ஹரிகர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் புதுடில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு AI173 என்ற விமானம் வாரந்தோறும் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
விமான சேவை உள்ள நாள்களில் புதுடில்லி விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் இந்திய நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு கலிஃபோர்னியா நேரப்படி காலை 6 மணிக்குச் சென்றடையும்.
சென்னையில் உள்ள பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஏஐ043 என்ற விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு புதுதில்லி விமான நிலையத்தைச் சென்றடையும்.
புதுதில்லி-சான்ஃபிரான்சிஸ்கோ விமானத்தில் சொகுசு வசதிகளுடன் கூடிய முதல் வகுப்பில் 8 இருக்கைகள், பிசினஸ் கிளாஸ் வகுப்பில் 35 இருக்கைகள், சாதாரண வகுப்பில் 195 இருக்கைகள் என மொத்தம் 238 இருக்கைகள் உள்ளன.
சாதாரண வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம் வரி நீங்கலாக ரூ.65,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய சேவை தொடங்கப்பட்டதை முன்னிட்டு இந்த விமானத்தில் முதல் வகுப்பு, பிசினஸ் வகுப்பில் பயணம் செய்வோருக்கு இந்தியாவுக்குள் பயணம் செய்வதற்கான ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு ஹரிகர் கூறியுள்ளார். மேலும் இந்த பேட்டியின்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் கே.எஸ்.ரெட்டி உடனிருந்தார்.
English summary-Air India to launch New Delhi-San Francisco direct flight