chennai-rain-261115வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னை உள்படம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும், புதுச்சேரியில் நாளை அதாவது வெள்ளிக்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இந்த வானிலை அறிக்கை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட தகவல் பின்வருமாறு: ‘தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகில் நேற்று நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்துவிட்டஅலும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதைத் தொடர்ந்து 27, 28 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பின்னர் 29-ம் தேதி, கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. 27-ம் தேதி ஒரு சில இடங்களில் கனமழையும், 28, 29 தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழையும் பெய்யக் கூடும்’ இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English summary-heavy rains expected for the next four days in Tamil Nadu and Puducherry