வரும் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் அதிகரிக்க மேலும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.
கல்வியின் தரத்தை அதிகரிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அதிக நிதியை பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார். இதனை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு அரசு அளிக்கும் பாடப்புத்தகங்கள் உள்பட 14 வகையான விலையில்லா கல்வி பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கச் செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அனைத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்ட பொருட்கள் சரியாக வினியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க இணை இயக்குனர்களை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விலையில்லா கல்வி பொருட்கள் மாணவ-மாணவிகளுக்கு விலையின்றியும் தங்கு தடையின்றியும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முதன்மை செயலாளர் த.சபீதா அவ்வப்போது கூட்டம் நடத்தி அதை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். மேலும் இந்த ஆண்டில் (2015-2016) தேர்ச்சி பெறுவதற்கு கேள்விக்குறியாக உள்ள அரசு பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் மெதுவாக கற்போர் என்று பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.
இந்த நிலையில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கண்காணிப்பில் ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் சிலரை தேர்ந்து எடுத்து சேலம், ஈரோடு, திருச்செங்கோடு ஆகிய பயிற்சி மண்டலங்களில் தமிழ்நாடு முழுவதும்உள்ள மொத்தம் 1,023 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர் உள்ளனர். அந்த 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஏற்கனவே பயிற்சி பெற்ற 1,023 ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பிளஸ்-2 அனைத்து பாடத்திலும் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதை தெரிந்து அதற்கேற்றபடி பாடங்களை படிக்க வைக்க சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த சி.டி. தமிழ்நாடு முழுவதும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த சி.டி.யை அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரி காப்பி எடுத்துக்கொடுக்க உள்ளார். எப்படியும் 100 சதவீத தேர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்கள் உள்ளனர்.
English Summary : Tamil Nadu School Education Department provides training for 25 thousand teachers to increase proficiency for +2 students.