தமிழகத்தில் இயங்கி வரும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஒருசில குறிப்பிட்ட படிப்புகளுக்கு அதிக கட்டணங்களை மாணவர்களிடம் இருந்து வசூல் செய்கின்றன. ஆனால் இந்த கட்டணங்களை கல்விக்கடனாக கொடுக்க வங்கிகள் மறுத்து வருகின்றன. மாநில கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் விதிப்படிதான் கல்விக் கடன் வழங்க முடியும் என்றும் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க முடியாது என்றும் வங்கிகள் தெரிவித்து வரும் நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்விக் கடனாக வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கினால்தான் கல்விக் கடன் வழங்குவதற்கான நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்றும் வங்கிகளுக்கு உயர் நீதிமன்றதின் மதுரை கிளை உத்தரவிட்டது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பி.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பு (சூரிய மின்சக்தி) படித்து வருகிறார். இவருக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ரூ.4.70 லட்சம் செலுத்த வேண்டியது வரும் என பல்கலைக்கழகம் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கியது. அந்த சான்றிதழின் அடிப்படையில் கல்விக் கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாணவர் சுப்பிரமணியன் விண்ணப்பம் செய்தார். ஆனால், அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டண அடிப்படையில் ரூ.1.70 லட்சம் மட்டுமே கல்விக் கடன் வழங்க முடியும் என்றும், கல்வி நிறுவனம் பரிந்துரை செய்த தொகை கல்விக்கடனாக வழங்க முடியாது என்றும் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து முழு கட்டணத்தையும் கல்விக் கடனாக வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என மாணவர் சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுப்பையா முன் வந்தது. இந்த மனுவிற்கு பதிலளித்த வங்கி “கல்வி கட்டண நிர்ணயக்குழு விதிப்படி ஒவ்வொரு பருவத்துக்கும் ரூ.30000 வீதம் கல்விக் கட்டணம், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் விடுதி கட்டணம் மட்டுமே கல்வி கடனாக வழங்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு: மாநில கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் விதிப்படிதான் கல்விக் கட்டணம் வழங்க முடியும் என்ற கருத்தை உயர் நீதிமன்ற தலைமை அமர்வு 2013-ம் ஆண்டில் நிராகரித்து உத்தரவிட்டது.

படிப்பில் உயர்ந்தும், பொருளாதாரத்தில் தாழ்வாகவும் உள்ள மாணவர்களுக்கு கல்வி நிறுவனம் கேட்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீத கட்டணம் மட்டும் கல்வி கடனாக வழங்கப்படும் என வங்கிகள் தெரிவிப்பது கல்விக் கடன் வழங்குவதற்கான நோக்கத்தை நிறைவேற்றாது கல்விக் கட்டண நிர்ணய குழு பரிந்துரைக்கும் கட்டணம் கல்வி கடனாக வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. மனுதாரருக்கு அவர் சேர்ந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் வழங்கிய கல்வி கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் கல்விக் கடன் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

English Summary : Madurai High court ordered that educational loans should be provided based on cost assessment certificate provided by college.