சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் புயல், கனமழை என பெரும் சேதங்களை ஏற்பட்ட நிலையில் சென்னையை மீண்டும் புயல் தாக்கும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது புயலுக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனினும் வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வானிலை அறிக்கையை அடுத்து சென்னை பள்ளி – கல்லூரிகளுக்கு இம்மாதம் 22-ம் தேதி வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார். இதே போல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களும் பள்ளி – கல்லூரிகளுக்கு இம்மாதம் 22-ம் தேதி வரை விடுமுறை என்று அறிவித்துள்ளனர். மழை தற்போது ஓரளவுக்கு நின்றுவிட்டாலும் சென்னை, புறநகர்களின் தாழ்வானப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் தமிழக அரசுடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொடர் மழை காரணமாக சென்னையில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
English summary-Schools & colleges remain closed in chennai till 22nd Nov