சென்னை நகரில் ஏற்கனவே பல பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் சிறப்புடன் பராமரித்து வரும் நிலையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மேலும் சில பூங்காக்களை அமைக்க சென்னை மாநகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டது. இதன்படி சென்னையில் வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலப் பகுதிகளில் ரூ.13.70 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்று சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ஆலந்தூர் மண்டலத்தில் திருவள்ளுவர் நகர், நாதமுனி தெருவில் ரூ.1.76 கோடி மதிப்பில் பூங்காவை மேம்படுத்தும் பணி, சபரி நகரில் ரூ. 49.99 லட்சம் மதிப்பில் ஒரு பூங்காவும், பெருங்குடி மண்டலம் பாலாஜி நகர் 31 ஆவது தெருவில் ரூ.49.99 லட்சம் மதிப்பில் ஒரு புதிய பூங்காவும், கோட்டம்-191 ஜெயச்சந்திரன் நகர் முதல் பிரதான சாலையில் ரூ.47.09 லட்சம் மதிப்பில் பூங்கா பசுமையாக்கும் பணிகள் மற்றும் மின்வசதிகள் செய்யும் பணிகளும், கோட்டம்-184 அண்ணா நெடுஞ்சாலை தெருவில் ரூ. 3.08 கோடி மதிப்பில் புதிய பூங்கா ஒன்றும், சோழிங்கநல்லூர் மண்டலம் துரைப்பாக்கம் ஆனந்தா நகர் பூங்காவில் ரூ.49.95 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர், இறகுப்பந்து விளையாட்டுத்திடல், நடைபாதை, கழிவறைகள் அமைத்தல் ஆகிய பணிகளும், துரைப்பாக்கம் பாலமுருகன் கார்டன் 3-ஆவது பிரதான சாலையில் ரூ.98.66 லட்சம் மதிப்பில் பூங்கா அமைத்தல், துரைப்பாக்கத்தில் ஆனந்தா நகர் பூங்காவில் மின்வசதி, பசுமை பணிகள், அமரும் இடங்கள், காவலர் கூடாரம் ஆகியவை ரூ.42.60 லட்சம் மதிப்பிலும், கோட்டம்-198, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய இடத்தில் பகுதி 1 மற்றும் 2 பூங்கா ரூ.2.99 கோடி மதிப்பில் அமைத்திட பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வளசரவாக்கம் மண்டலத்தில் நொளம்பூர் 9-ஆவது பிரதான சாலையில் பூங்கா அமைத்திட ரூ.84.92 லட்சம் மதிப்பிலும், நொளம்பூர் 7-ஆவது குறுக்குத் தெருவில் ரூ.1.06 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : Seven new parks with modern facilities opened in Chennai.