தென்மேற்கு பருவமழை ஆரம்பமானதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று முன் தினமும், நேற்றும் சென்னையில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த சில நாட்கள் வரை அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திய நிலையில் தற்போது சீதோஷ்ண நிலை மாற்றி மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலும் தலைகாட்ட மறுத்தது. மதியத்திற்கு பிறகே மிதமான அளவு வெயில் அடித்தது. இந்த நிலையில், நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழத் தொடங்கியது. இடி-மின்னலும் மிரட்டியது. இரவு 7.45 மணிக்கு மழை தூரத் தொடங்கியது. சற்று நேரத்தில் மழையின் வேகம் கூடி, கனமழை கொட்டியது.

மணலி, மாத்தூர், நுங்கம்பாக்கம், மாதவரம், மயிலாப்பூர், எழும்பூர், புளியந்தோப்பு, நந்தனம், சைதாப்பேட்டை, மண்ணடி, பிராட்வே, அண்ணாநகர், அமைந்தகரை, வடபழனி, கே.கே.நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம், மெரினா கடற்கரை, அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம், ஊரப்பாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கனமழையால், சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், ரோட்டு ஓரம் இருந்த கட்டிடங்கள் முன்பு தஞ்சம் அடைந்தனர்.

மெரினா கடற்கரையில் காற்று வாங்க கூடியவர்கள், மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் சாலைக்கு ஓடி வந்தனர். அங்குள்ள பஸ் நிறுத்தங்களில் அவர்கள் ஒதுங்கி நின்றதால், கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். கோயம்பேடு 100 அடி சாலை உள்பட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நின்ற பெரிய மரம் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. உடனடியாக, தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு வந்து சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர், ஈ.வி.கே. சம்பத் சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

English Summary : Heavy rain in Chennai for 2nd day.