புதிய தலைமுறையில் சக்தி விருதுகள் 2024 (மார்ச் 8, உலக மகளிர் தினத்தன்று ஒளிபரப்பு)
உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதைக் கடமையாகக் கொண்டிருக்கும் புதிய தலைமுறை, சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள் மற்றும் ஆசிரியர் விருதுகள் என்று ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி வருகிறது.
சமூகம் தழைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் #SakthiAwards வழங்கப்பட்டு வருகின்றன.
தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற ஆறு தலைப்புகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆராயப்பட்டு, அதிலிருந்து சிறந்தவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான விருதாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். சென்னையில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் கீழ்க்கண்ட 6 பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் வழங்கப்பட்டன:
1. MS சுவாமிநாதன் அறக்கட்டளைத் தலைவர், WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் புலைமைக்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
2. மாற்றுப் பாலினத்தை சேர்ந்த திருநங்கை பிரியா பாபு அவர்கள் கருணைக்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
3. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் நிகார் சாஜி அவர்கள் தலைமைக்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
4. தீயணைப்புத் துறையில் சிறந்து விளங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கும் பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் துணிவிற்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
5. சதுரங்க வீராங்கனை வைஷாலி அவர்கள் திறமைக்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
6. பத்மஸ்ரீ பட்டம் பெற்ற 108 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள் அவர்கள் ‘வாழ்நாள் சாதனை’க்கான சக்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் இசையில், பெண் சக்தியின் பெருமையைப் பறைசாற்றும் சிறப்புப் பாடலோடு விழா ஆரம்பித்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட புதிய தலைமுறை குழுமத் தலைவர் சத்திய நாராயணன், “ஆண், பெண் இருவரும் சரிசமம் ஆனவர்கள். சம உரிமையை இலக்காக வைத்து லட்சியத்தை நோக்கி உத்வேகத்துடன் பயணிக்க வேண்டும். லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பெண்களுக்கு புதியதலைமுறை என்றும் துணை நிற்கும்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.
புதிய தலைமுறை குழுமத் தலைவர் சத்திய நாராயணன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரி வேந்தர், முன்னாள் இந்திய கபடி வீரர் மற்றும் இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், இந்தியாவின் முதல் குதிரை ஏற்ற வீரர் ரூபா குன்வர் சிங், திரைப்பட இயக்குநர் ஹலிதா ஷமீம், Shalom Med Education நிறுவனத் தலைவர் அனிதா காமராஜ், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, அவரின் மனைவி ராஜ்வி கார்த்திக், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி, Pradee Queen Holiday Resorts நிறுவனர் மற்றும் CEO முரளி, ஐநாவின் அகதிகளுக்கான மனிதவள மேம்பாட்டுத் துறை உறுப்பினர் ஸ்ரீவித்யா, மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் நிறுவனர் காதம்பரி உமாபதி, நடிகை சங்கராபரணம் ராஜலக்ஷ்மி, கவிஞர் இளம்பிறை, இயக்குநர் வசந்தபாலன், Femi9 Healthcare நிறுவனர் கோமதி, நடிகை அபர்ணதி, லோட்டஸ் வுமன் கேர் மருத்துவமனை தலைவர் உஷா நந்தினி, கனரா வங்கியின் அலுவல் சாரா இயக்குநர் நளினி பத்மநாபன், எஸ்.ஆர்.எம். பப்ளிக் ஸ்கூல் & எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் இயக்குநர் மங்கை சத்தியநாராயணன், எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் சி.ஓ.ஓ டாக்டர் சந்திரசேகர், சூர்யா பட்டு சென்டர் இணை நிறுவனர் & சி.இ.ஓ மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். ஜெயந்தி கண்ணப்பன் உள்ளிட்ட பல ஆளுமைகள் விருது விழாவில் கலந்துகொண்டனர்.
சக்தி விருதுகள் நிகழ்ச்சி, மார்ச் 8, 2024 (வெள்ளிக்கிழமை) உலக மகளிர் தினத்தன்று, மாலை 5:00 மணி முதல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.