தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் இணையத்தின் மூலம் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்த சிலர் தங்களுடைய நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் புகார் வந்தது. விண்ணப்பம் செய்த ஒரு சிலர் புகைப்படம், கையெழுத்து, தடையில்லாச் சான்றிதழ் ஆகியவை சரியாக இல்லாததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரிய அலுவலகத்தை சுமார் 150 விண்ணப்பதாரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியபோதும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் காரணத்தை நேரில் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும், அதை தெரிந்து கொள்ளாமல் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றும் உறுதியாக கூறினர்.
அதன்பின்னர் சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் போராட்டம் செய்த அனைவருக்கும் டோக்கன் கொடுத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர்களுடைய விண்ணப்பத்தில் இருந்த தவறை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்ட காரணத்தை விளக்கி கூறி அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னை அண்ணா சாலையில் சிலமணி நேரம் பரபரப்பு அடைந்தது.
English Summary: SI Post Applied Candidates goes for sudden Strike in Annasalai.