சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதை அடுத்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் மீன்வள பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

2015-2016ஆம் ஆண்டிற்கான இளங்கலை மீன்வள பட்டப் படிப்பு (BFSC) மற்றும் மீன்வள பொறியியல் (BE) படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, மீன்வள படிப்புகளுக்கு இன்று காலை 10 மணி முதல் பல்கலைகழகத்தின் இணையதளமான www.tnfu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புக்கு தாள் வடிவிலான விண்ணப்பம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ரூ.600 விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனிலேயே செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் ஆன்லைனிலேயே சமர்ப்பித்துவிட வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர்கள் ரூ.300 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை. மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்கள் பெற 04365-240558 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளும்படி தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

English Summary: Applications Issued from Today on-wards for Fisheries Bachelor Degree in Fisheries University.