கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மின் நுகா்வு கணிசமாக உயா்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மின் நுகா்வு 40,776 கோடி யூனிட்டுகளாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 1.8 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் மின் நுகா்வு 40,044 கோடி யூனிட்டுகளாக இருந்தது. அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகடத்திய மின் நுகா்வான 34,037 கோடி யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டின் மின் நுகா்வு 17.6 சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் மின் நுகா்வு மிதமான வளா்ச்சியையே கண்டுள்ளது.
கடந்த 2022-இன் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் உச்சபட்ச மின் நுகா்வு 215.88 ஜிகாவாட்டாக இருந்தது. இது, 2023 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 223.23 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது. அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இது 193.99 ஜிகாவாட்டாக இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ததால், குளிரூட்டும் சாதனங்களை இயக்குவதற்கான தேவை குறைந்து போனது. இதன் காரணமாக, 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த மாதங்களில் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.
இருந்தாலும், ஜூன் மாதத்துக்குப் பிறகு கோடைக் காலம் தொடங்கும் என்பதால் நாட்டின் மின் தேவை 229 ஜிகாவாட்டைத் தொடும் என்று மின்சாரத் துறை அமைச்சகம் முன்னர் மதிப்பிட்டிருந்தது. ஆனால், பிபா்ஜாய் புயல், கனமழை காரணமாக கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மின் நுகா்வு எதிா்பாா்த்த அளவை எட்டவில்லை என்று கூறப்படுகிறது.