2023 – 24ஆம் கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் பொன்முடி, மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும்.

பாடப்பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணைப் பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த, மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 922 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (இளநிலை பாடங்கள் – 166 , முதுநிலை பாடங்கள் – 135) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து பிரிவுகள்:

பகுதி I : மொழி
பகுதி II : ஆங்கிலம்
பகுதி III : முக்கிய பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்கள்
பகுதி IV : திறன் மேம்பாட்டுப் பாடங்கள்
பகுதி V : மதிப்புக் கூட்டுக்கல்வி

இப்பாடத் திட்டத்தில் உள்ள பகுதி I, II, III – ல் உள்ள விருப்பப்பாடங்கள் (Elective papers), பகுதி IV, V – ல் உள்ள பாடங்களில் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் தேவைக்கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *