நடிகர் சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாண்டியராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் எப்போது பரபரப்பாக டுவிட்டரில் சுறுசுறுப்பாக இருக்கும் சிம்பு திடீரென டுவிட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திடீரென சிம்பு டுவிட்டரில் இருந்து தான் தற்போதைக்கு விலகுவதாகவும், இனிமேல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை தனது ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்றும் தேவைப்பட்டால் மீண்டும் சில வருடங்கள் கழித்து டுவிட்டருக்கு திரும்புவதாகவும் கூறியுள்ளார். தன்னை ஃபாலோ செய்யும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் டுவிட்டரில் கடைசியாக டுவீட் செய்துள்ளார்.
ஒரு நல்ல நடிகருக்கு தங்கள் ரசிகர்களை திருப்தி செய்யும்படியான திரைப்படங்களை கொடுப்பது மட்டுமே ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்றும், அந்தவகையில் இனிவரும் காலங்களில் தன்னுடைய ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் தரமான, நல்ல படங்களை கொடுப்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் இனிமேல் செலுத்த உள்ளதாகவும், தன்னுடைய நிலைமையை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என தான் நம்புவதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
English Summary: Simbu Left From the Twitter. Simbu Announcement.