சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை வாய்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 17-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ஆர்.கே.நகர் சென்னை துறைமுக மைதானம், தண்டையார்பேட்டை, சென்னை-81 என்ற இடத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கு கொண்டு 20,000 பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலையளிப்போர் கோரும் சிறப்புத்திறன்களை அறிந்து அதற்கு பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகமும், தொழிற்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இந்த முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க விரும்புபவர்கள் பயனுறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சேவையும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுயவேலைவாய்ப்பு குறித்து ஆலோசனையும் பெறலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற விரும்புவோர் தங்களது பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Special Job Fair Camp on Oct-17th in R.K.Nagar Chennai.