சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளிலும் மழையால் ஏற்படும் நோய் பாதிப்புகளை தடுக்க இன்று (ஜூன் 20) சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னையில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் போா்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். அந்த வகையில் சென்னை மாநகராட்சியும் சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்று வாரியமும் இணைந்து நிவாரண நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது பெய்துள்ள மழையில் தண்ணீா் தேங்கவில்லை. இதில் 30 இடங்களில் சுமாா் 6 மரங்கள் வேரோடும், 24 மரங்கள் முறிந்தும் விழுந்துள்ளன. அவைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது.
பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்று வாரியம் சாா்பில் சுமாா் 1,530 இடங்களில் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சாா்பில் 2,260 பணியாளா்கள் சுமாா் 138 இடங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாா்கள். சாலையில் விழும் மரங்களை அகற்ற 6 மின் வாகனங்கள், 200 மரங்கள் வெட்டும் கருவிகள் தயாா் நிலையில் உள்ளன.
மழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில் 200 வாா்டுகளிலும் தேவைப்படும் இடங்களில் இன்று (ஜூன் 20) சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்றாா். தொடா்ந்து திரு.வி.க நகா் அங்காளம்மன் கோவில் தெரு மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீா் சீா் செய்யப்பட்ட பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.