ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு அவ்வப்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வரும் நிலையில் தற்போது புதியதாக எர்ணாகுளம் – ஹெளரா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 02854 என்ற எண்ணுடைய சிறப்பு ரயில் வரும் ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 8.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 11 மணிக்கு ஹெளரா சென்றடையும். இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்தரி, விசாகப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, கட்டக், பாத்ராக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல் சென்னை எழும்பூர் – ஹெளரா இடையேயும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06163 என்ற எண்ணுடைய சிறப்பு ரயில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி அதாவது நாளை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஹெளராவுக்கு மறுநாள் இரவு 10.45 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்தரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், பிரம்மபூர், குர்தா சாலை, கட்டாக், பாத்ராக், கோரக்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஹெளரா செல்லும் ரயில் பயணிகள் மேற்கண்ட இரண்டு சிறப்பு ரயில்களையும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
English Summary: Special Train for Howrah from Chennai and Ernakulam.