sslc-30115கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக மழை விட்டிருந்தாலும் நேற்று முதல் மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக அரை ஆண்டு தேர்வுக்குரிய பாடங்கள் பல பள்ளிகளில் முடிக்கப்படாததாலும், பள்ளி மாணவர்கள் பலர் வெள்ளத்தில் புத்தகங்களை இழந்திருப்பதாலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரையாண்டு தேதியில் இருந்து தள்ளி வைக்கப்படலாம் என மாணவ-மாணவிகளிடையே எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் பள்ளி கல்வி இயக்குனரகம் கடந்த நவம்பர் மாதம் பிளஸ்-2 மற்றும் 10ஆம் வகுப்பு அரை ஆண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, பிளஸ்-2 தேர்வு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி முடிவடைகிறது. அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேற்கண்ட தேதிகளில் இருந்து அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் கூறியதாவது: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தான் கனமழை பெய்துள்ளது. எனவே, இப்போதைக்கு அரை ஆண்டு தேர்வு கால அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி தேர்வு நடைபெறும். ஆனால், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த 3 நாட்களுக்கு பிறகு அரை ஆண்டு தேர்வு நடைபெறும் அட்டவணையில் மாற்றம் உண்டா? இல்லையா? என்பது தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.English summary-Will SSLC & 12th half yearly exams get postponed