சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்களின் முயற்சியால் அந்த கல்லூரியில் உள்ள உடலியல் துறை விரிவுரை அரங்கம் ரூ. 15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
1938ஆம் ஆண்டு உடல்கூறுயியல், உடலியல் ஆகிய இரண்டு துறைகளுடன் தொடங்கப்பட்ட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மிகப் பழமையானக் கட்டடங்களின் ஒன்றான உடலியல் துறை அரங்கம் மிகவும் பழமையாக இருந்ததால், இந்த அரங்கத்தை கடந்த 1976-ஆம் ஆண்டு இதே கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மருத்துவ மாணவர்கள் புதுப்பிக்க முடிவு செய்து அதை தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் மாணவர் ஒருவர் கூறியதாவது: ‘ இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட பழைமையானத் துறை உடலியல் துறை ஆகும். இந்த அரங்கமானது அதன் பாரம்பரியத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அதைப் புதுப்பிக்கத் தீர்மானித்தோம். இதற்காக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒன்றைத் தொடங்கி, நிதி திரட்டினோம். திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு அரங்கத்தின் பழைமையானத் தோற்றம் மாறாத வகையில் புதுப்பிக்கப்பட்டது.
சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உதவியை எதிர்பார்க்காமல் கல்லூரிக்கு ஏதாவது செய்ய விரும்பினோம். இதைத் தொடர்ந்து, கல்லூரியின் வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். புதுப்பிக்கப்பட்ட அரங்கத்தை, கல்லூரி முதல்வர் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் திறந்துவைத்தார். இதையடுத்து இன்னும் சில கட்டிடங்களையும் முன்னாள் மாணவர்கள் புதுப்பிக்க உள்ளதாக கல்லூரி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
English Summary : Department of Physiology Lecture Arena updated by old students of Stanley Medical College.