வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மின்உற்பத்தி மின்கொள்முதல் உள்ளது. இருப்பினும் மின்சாதன பழுதால் மின்தடை தொடர்கிறது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் அனல்காற்றில் மக்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையி, மின்தடை ஏற்படுவது அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடைக் காலத்தில் எவ்வளவு மின்தேவை அதிகரித்தாலும் அதைபூர்த்தி செய்ய முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ‘டிவி மிக்சி’ உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களில் ‘ஏசி’ சாதனத்திற்கு தான் அதிக மின்சாரம் செலவாகிறது.
பள்ளி, கல்லுாரி தேர்வுகள் மற்றும் வெயில் காரணமாக அனைத்து மின் இணைப்புகளிலும் ‘ஏசி’ உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகம்உள்ளது. இதனால் துணைமின் நிலையங்களில் உள்ள ‘டிரான்ஸ்பார்மர்’ மற்றும் மின் வழித்தடங்களில் ‘ஓவர் லோடு’ காரணமாக, பழுது ஏற்படக் கூடாது என்பதால் 10 – 15 நிமிடங்கள் ‘ஆப்’ செய்யப்பட்டு மின் சப்ளை செய்யப்படுகிறது.
அப்படி செய்யாமல் தொடர்ந்து மின்சப்ளை வழங்கினால் மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டு சரி செய்ய அதிகநேரம் ஏற்படும். இதனால் சில இடங்களில் சில நிமிடங்கள் மின்சப்ளை நிறுத்தப்பட்டு மீண்டும் சப்ளை வழங்கப்படுகிறது.