சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 61 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, ஒரு லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதால் இத்தனை பேர்களுக்கும் எழுத்து தேர்வு நடத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள, 61 உதவி பொறியாளர்கள், 71 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை, நேரடி பணி நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பை சென்னை மாநகராட்சி சமீபத்தில் வெளியிட்டது. சென்னை மாநகராட்சி இணையதளத்தில், விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கடந்த, 31ம் தேதி மாலைக்குள், அம்மா மாளிகையில் உள்ள அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த பதவிகளுக்கு ஒருசில நாட்களில் விண்ணப்பங்கள் மலைபோல் குவிய தொடங்கியது.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நிலவரப்படி உதவி பொறியாளர் பணிக்கு மட்டும், 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. 31ம் தேதியுடன் முடிவடைந்த கடைசி நாள் வரை ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வரை வந்திருக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விண்ணப்பங்களை சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் வாரியாக பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வு எழுத தகுதி உள்ள நபர்களுக்கு, தேர்வு அனுமதி சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
இந்த தேர்வு வரும் 23ம் தேதி, தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி எதிர்பார்த்ததை விட, பல மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளதால் இத்தனை விண்ணப்பதாரர்களுக்கும் எப்படி எழுத்து தேர்வு நடத்துவது என, மாநகராட்சி அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த தேர்வை எப்படி நடத்துவது என ஒருசில நாட்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
English Summary:Sudden Problem for Selection of vacant positions at the Chennai Corporation.