மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலில் இன்று தொடங்கும் கோடை விழாவை முன்னிட்டு, பிரையண்ட் பூங்காவில் பிரமாண்ட மலர்க்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி மலர்கள் பூக்கும் இந்த கண்காட்சியை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலமாகும். குறிப்பாக மே மாதத்தில் சீசன் களைகட்டும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள். இவர்களை கவரும் விதமாக, அரசு துறை சார்பில் மலர்க்கண்காட்சி விழா, கோடை விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய அம்சம் மலர் கண்காட்சியாகும். இது நகரில் உள்ள பிரையண்ட் பூங்காவில் நடைபெறும். இந்த கண்காட்சியை காண தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இந்தாண்டுக்கான 60வது மலர்க்கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் இன்று (மே 26) தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறை செய்துள்ளது.
வழக்கமாக 2 தினங்கள் மட்டுமே மலர்க்கண்காட்சி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு 26ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. சிறந்த மலர், காய்கறி தோட்டங்கள், சிறந்த பழ தோட்டங்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்காக பரிசுகள் வழங்கப்படும். இவற்றிற்கான போட்டிகளை தோட்டக்கலைத் துறை நடத்துகிறது.