Suriya-24102015தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்று தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர்கள் பதவிகளுக்கு கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முதல் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் குறித்து இதுவரை எந்தவித கருத்தையும் சொல்லாமல் இருந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, நேற்று தனது கருத்தை ஒரு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதில் சரத்குமார் அணிக்கு தனது கண்டனங்களையும் விஷால் அணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் அறிவுரைகளையும் கூறியுள்ளார்.

சூர்யா தன்னுடைய அறிக்கையில் கூறியதாவது: ‘இந்தத் தேர்தல் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. தேர்தலுக்காக நடந்த பிரசாரத்தில், வருந்ததக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன. நடிகர்கள் ஒரே குடும்பம் என்று சொல்லிக் கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது பண்பு மறந்து, வார்த்தை தடித்து அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழல் இனி ஒரு போதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.

வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு, சக கலைஞனாக என்னுடைய வேண்டுகோள் இவை. கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். அனைத்து கலைஞர்களுக்கும் நன்மை கிடைக்க பாடுபடுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள். பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள். சக கலைஞர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே, உங்களின் உண்மையான வெற்றி. நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்’ என்று சூர்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.English summary-Actor Suriya advices vishal team