சமீபத்தில் தமிழகம் முழுவதும் பெய்த மழை மற்றும் வெள்ளதால் பெருவாரியான மாணவர்களின் புத்தகங்கள் சேதமடைந்தது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது புதிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளிகளில் பயிலும் புத்தகங்களை இழந்த மாணவர்கள் இணையதளம் மூலம் தங்கள் விபரங்களை பதிவு செய்தால் அவர்களுடைய வீட்டிற்கே புதிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாடநூல்களை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாடநூல்களை இழந்திருந்தால் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் www.textbookcorp.in என்ற இணையதளம் வழியாக பதிவுசெய்து, வீட்டு முகவரியிலேயே பாடநூல்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. இது தவிர தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரினால், ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி இணையவழி சேவையை பயன்படுத்தி உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary-For the students studying in self-financed or private schools, if they require fresh text books, can visit the website of Tamil Nadu Text Book & Educational Activities Committee