உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார் ஆகியவைகள் மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “வரும் 1-ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள், பார்கள்) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள், விடுதிகள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபான விற்பனை செய்யக் கூடாது. விதியை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை தினத்தின் போது கள்ள மார்க்கெட்டில் மதுவிற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த அறிவிப்பால் ஏப்ரல் 30ஆம் தேதி மதுவிற்பனை வழக்கத்தை விட அதிகளவு இருக்கும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary: TASMAC will remain closed on May 1, Chennai Collector Order.