இதுவரை தமிழில் ஒரிஜினலாக எடுக்கப்பட்டு வரும் படங்களுக்கு அதுவும் தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே தமிழக அரசின் வரிச்சலுகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கும் வரிச்சலுகை வழங்க புதிய மசோதா நேற்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று சட்டமன்றத்தில் வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இதுகுறித்து தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: மொழி மாற்றம் செய்யப்பட்ட படத்தின் திரைப்பட காட்சிக்கு 50 சதவீத கேளிக்கை வரி விதிப்பதாக 2003ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
தற்போது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக தமிழில் நேரடியாக தயாரிக்கப்பட்ட படங்களுக்கும், மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களுக்கும் இடையில் உள்ள கேளிக்கை வரி கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து சட்ட திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவினால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் திரைப்படங்களும் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : New bill for dubbing film was passed to the assembly by M.C.Sambath.