சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி 2 ஆண்டு காலமாக பி.எட். படிப்புக் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த படிப்பிற்கான புதிய கல்விக் கட்டணத்தை விரைவில் அரசு நிர்ணயம் செய்யவுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள் கூறியுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 1,777 பி.எட் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இதற்காக 7,425 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1,113 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎட் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் தர வரிசைப் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், கல்லூரியை தேர்வுசெய்வதற்கான ஒற்றைச்சாளர முறையிலான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

இந்த கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் பி.பழனியப்பன், “உயர் கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் பலனாக உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 18 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 58 ஆண்டுகளாக தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்து வருகின்றன. தற்போது புதிதாக 5 பல்கலைக்கழக உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் பி.எட். படிப்பில் கூடுதலான மாணவ-மாணவிகள் சேர முடியும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு சென்னை அருகே உள்ள காரப்பாக்கத்தில் ரூ.38 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்’ என்று கூறினார்.

இந்த கலந்தாய்வு தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ், இணை இயக்குநர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) பி.ஆர்.உமாராணி, தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்தாய்வு நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பி.பழனியப்பன் கூறியதாவது: “தற்போது பிஎட் படிப்புக்கு கல்விக் கட்டணமாக அரசுக் கல்லூரிகளில் ரூ.2 ஆயிரம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரம், தனியார் சுயநிதி கல்லூரிகளில் ரூ.41,500-ம், ‘நாக்’ அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ரூ.46,500-ம் வசூலிக்கப்படுகிறது.

பிஎட் படிப்புக் காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒரே கல்விக்கட்டணம் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பிஎட் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்குமாறு அதற்காக நியமிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது. கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்” என்று கூறினார்.

பிஎட் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறும் என்றும் முதல்கட்ட கலந்தாய்வின்போது காலியிடங்கள் ஏற்பட்டால், 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தி இடங்கள் நிரப்பப்படும் என்று பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளர் பாரதி தெரிவித்தார்.

English Summary : Since B.Ed course duration increased for two years, fee structure for second year will be issued soon.