சென்னையின் முக்கிய நதியான கூவம் மிகவும் அசுத்தமடைந்துள்ள நிலையில் இந்த நதியை சுத்தப்படுத்தும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி, கூவம் நதிக்கரையோரம் மரங்கள் நடுவது, பூங்காக்கள் அமைப்பது, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒன்றை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:
கூவம் நதியில் பருத்திப்பட்டு முதல் 32 கி.மீ. தொலைவுக்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நதிக்கரையில் கழிவுநீரைத் திருப்பிவிடுவது, திடக்கழிவு மேலாண்மை, வெள்ளத் தடுப்புப் பணி, மறுகுடியேற்றம் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பணிகள் சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை, ஆவடி நகராட்சி, திருவேற்காடு நகராட்சி ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளபடும்.
கூவம் நதியில் சேத்துப்பட்டு பாலத்தில் இருந்து அலையின் தாக்கம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதால் இந்தப் பகுதியில் பணிகளை மேற்கொள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி தேவை. இந்தப் பகுதியில் 69 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகள் சென்னை நதிகள் சீரமைப்பு டிரஸ்ட் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் வரும் இடங்களில் பணிகளைச் செய்ய வேண்டுமானால், அந்த ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். இதற்காக சேத்துப்பட்டு பாலத்தில் இருந்து முகத்துவாரம் வரையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இதன்படி, நிலத்தின் தன்மை, நிலத்தடி நீர் குறித்த தகவல், காற்றின் தரம், தண்ணீரின் தரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிக்கை தயாரிக்க வேண்டும்.
இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வை மேற்கொள்ள விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த தொகை கோரும் நிறுவனத்துக்கு பணி வழங்கப்படும். பணிக்காலம் 5 மாதங்கள் ஆகும் என்று அந்த டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் வரும் ஜூன் 8-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Tenders are open to clean the coovam river from June 8th, 2015.