சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிறுவனம் தனது செல்போன் செயலியில் புதிய வசதிகளை அப்டேட் செய்துள்ளது.
வெறும் ரயில் அட்டவணை உள்ளிட்ட தகவல்களோடு அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் செயலியில், தற்போது ரயில் எங்கே இருக்கிறது, ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் மெட்ரோ ரயில் எப்போது வரும்? காலதாமதமாக வரும் ரயிலின் விவரம் என அனைத்தையும் ஒரு பயணி தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் ஒரு பயணி தனது பயணம் குறித்து உடனுக்குடன் முடிவெடுக்க முடியும் என்றும், நீண்ட நேரம் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட சேவைகளுடன் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இதில் புதிய சேவைகள் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதில் சமீபத்தில் தங்களது ஸ்மார்ட் கார்டை டிக்கெட் கவுண்டரில் நீண்ட வரிசையில் நின்று ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக ஆப் வாயிலாகவே ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.