தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் 2 கோடியே 58 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேறும் நிகழ்ச்சி சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 1 கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்கு 1,027 சிகிச்சைகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரையும், 154 சிறப்பு சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலும் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மத்திய அரசின் காப்பீடு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் 77 லட்சம் ஏழை குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 கோடியே 58 லட்சம் பேர் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் 1.5 கோடி குடும்பங்கள் பெரிதும் பலன் பெறும். இதில் இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல் மற்றும் மூளை சார்ந்த அறுவை சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு முழு சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பல ஏழை குடும்பங்கள் முழுமையான மருத்துவ பலன்களை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.