சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இயங்கி வரும் ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தியிருந்தாலும், பயணிகளிடம் அதிக கட்டணங்களை ஆட்டோ ஓட்டுனர்கள் பெற்று வருவதாக அதிகளவிலான புகார்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து தமிழக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. இதன்படி ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் அளிக்கும் வகையில் கட்டணமில்லாத புதிய தொலைபேசி எண் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக கட்டணம் கேட்கும் ஆட்டோ டிரைவரின் பெயர், வண்டி எண் ஆகியவற்றுடன் இந்த எண்ணில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 18004255430 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது. பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழக அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது.
ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்ப வதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்டோ இதுவரை வழங்கப்படவில்லை. பின்னர், இதே ஆட்டோ கட்டண முறை தமிழகம் முழுவதும் படிப்படியாக அமலாக்கப்பட்டது.
எரிபொருட்கள், உதிரி பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய தொடங்கியுள்ளனர். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60 வசூலிக்கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக நுகர்வோர் அமைப்புகளும், பொதுமக்களும் தமிழக அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆட்டோ கட்டணம் குறித்து புகார் அளிக்கும் வகையில் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary:The High Price Of Auto?Notice Free Number to Report.