தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக டி.எம்.எஸ் மேதின பூங்கா, திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இதில், சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான பணிகளை மேற்கொண்டு வந்த நிறுவனம் பணிகளை திட்டமிட்ட காலத்தில் முடிக்காததால் திடீரென வெளியேறியது. இந்த நிறுவனத்திற்கு பதிலாக புதிய நிறுவனம், ஒன்று எஞ்சியுள்ள பணிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வேலையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “சைதாப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ் வரையிலான பணிகளை ரூ.640 கோடி செலவில் மேற்கொள்ள எல் & டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகளை தொடங்கியுள்ளது. அதேசமயத்தில் டிஎம்எஸ் – மே தின பூங்கா இடையிலான பணிக்கு திட்ட மதிப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக பிரச்சினை எழுந்ததால் அங்கு பணிகள் தடைபட்டுள்ளன.
பின்னர், திட்ட மதிப்பீடு தொகையை கணிசமாக உயர்த்தி டெண்டர் மூலம் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். அதாவது, டிஎம்எஸ் – மே தின பூங்கா வரையில் சுரங்கப் பணிகளுக்கு அப்கான்ஸ் நிறுவனமும், ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிக்கு எல் & டி நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பணிக்கான ஆணை மட்டும் வழங்க வேண்டும்.
இதேபோல், வண்ணாரப் பேட்டை இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்கு டெண்டர் இறுதி செய்து, பணி ஆணை மட்டுமே வழங்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்த காலகட்டத்தில் அரசு புதிய திட்டங்களை அறிவிப்பது, தொடங்குவது கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் திட்டம் புதிய திட்டம் அல்ல, ஏற்கெனவே உள்ள திட்ட பணிகளுக்கு டெண்டர் மூலம்தான் நிறுவனம் தேர்வு செய்துள்ளோம். எனவே, இது தொடர்பாக துறை செயலாளர் மூலம் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால் மட்டுமே பணிகள் தொடங்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.
English Summary: The impact of the election code of conduct works on the metro.