greenpark16316சென்னை மக்களுக்கு மெரினா பீச் உள்பட பல சுற்றுலா பகுதிகள் இருந்தபோதிலும், சமீபத்தில் தொடங்கப்பட்ட சேத்துப்பட்டு பூங்காவுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது. இந்த பூங்காவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சென்னை மக்கள் மட்டுமின்றி தினந்தோறும் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை சேத்துப்பட்டில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது பிறந்த நாளில் காணொளி காட்சி மூலம் திறந்து தொடங்கி
வைத்த இந்த பசுமை பூங்காவுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளதாக இந்த பூங்காவை பராமரிப்பு செய்யும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மீன்வளத்துறை பராமரிப்பில் சேத்துப்பட்டு ஏரிப்பகுதி புனரமைக்கப்பட்டு, மீன்பிடித்தல், படகுகுழாம் உள்ளிட்டவை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நடைபயிற்சிக்காக நடைபாதை, பூங்காவைச் சுற்றி மூலிகைச் செடிகள் அமைத்தல் உள்ளிட்டவையும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பசுமை பூங்காவிற்கு சென்னை, புறநகர் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.25-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.25-ம் பெறப்படுகிறது. ஏரியின் பரப்பளவு குறைந்த அளவில் உள்ளதால், 15 படகுகள் மட்டுமே செல்ல முடியும். தற்போது 10 படகுகள் உள்ளன. சவாரி செய்ய லைப் ஜாக்கெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருந்து படகு சவாரி செய்கின்றனர். கடந்த 18 நாள்களில் மட்டும் குழந்தைகள் உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர்.

நுழைவுக் கட்டணமாக ரூ.3 லட்சமும், படகு சவாரியில் ரூ.2 லட்சமும், மீன்பிடிக்கும் கட்டணம்-மீன் விற்பனை-வாகன நிறுத்தும் கட்டணம் ஆகியவற்றின் மூலமாக ரூ.3 லட்சமும் என மொத்தம் ரூ.8 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது. பூங்காவில் சேதப்படுத்துதல், இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கண்காணிப்பு, பாதுகாப்பு, நவீன வசதிகள் உள்ளிட்ட விஷயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பசுமை பூங்கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English Summary: Income of Rs 8 lakh in 15 days. Green Park Chennai Chetput overwhelming reception.