சென்னை: கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேரம் செல்ல செல்ல காஜா புயல் வலுவடைந்து கொண்டே செல்கிறது. தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேற்று மாலை 990 கிமீ தொலைவில் இந்த புயல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி தற்போது புயலாக மாறி உள்ளது. தற்போது இந்த புயல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது .
முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி வந்து பின் ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த புயல் சென்னை மற்றும் நாகை இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. வரும் 15ம் தேதி இந்த புயல் கரையை கடக்கும். இந்த புயல் கரையை கடக்கும் போது வடதமிழ்கத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தீவிரமடையும் கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும். இதனால் 15 தேதி வட தமிழகத்தில் ஒரே நாளில் 20 செமீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு அருகே வரும் போது 120 கிமீ வரை காற்றின் வேகம் வீச வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.